
வேர் விட்டு விழுது பரப்பி
விருட்சமாய் மனதினிலே
வெறுமைகள் வாட்ட...
வானத்தை நானும்
அண்ணாந்து பார்க்கின்றேன்
அங்கே
மின்னிடும் நட்சத்திரங்கள் எல்லாம்
என்னைப் பார்த்து
மௌனமாய்
கண் சிமிட்டி மறைகின்றன.
விழி மூடித் தூங்குகிறோம்
விடியல் கூட
எமக்கு நிரந்தரமா...?
கதறும் மனதிலிருந்து
சிதறிடும் சில துளியாய்
விரக்தி ஒன்று
விசும்பலாய் விழுகிறது.
கல்லான மனதில்தான்
கருணையும் இல்லை
கண்கள் இரண்டிருந்தும்
காட்சியுமா தெரியவில்லை...?
ஓ...!
உயிரான ஓவியம் ஒன்று
உருக்குலைந்து போனது ஏன்...?
உள்ளே அழும் மனது
உயிர் வலிக்கக் கேட்கிறது.
அல்லும் பகலும்
ஆலம் விழுதாய்
அடி மனதில்
அசையாமல் வளர்த்த
அந்த ஆழமான நம்பிக்கை
இன்று அடியோடு சாய...
இமயத்தின் உச்சியாய்
இதயத்தில் வளர்த்த
நம்பிக்கைச் சின்னமொன்று
சிதைந்து சின்னாபின்னமாக...
அசையாமல் இன்றுவரை
அணையாத தீபமொன்று
ஆடும் காற்றோடு
அணைந்தே போக...
மனதுக்கு
மௌனப் பூட்டுப் போட்டபடி...
காலம் எனக்கு
கற்றுத் தந்த பாடமாய்...
கண்ணோரம் துளிர்க்கும்
கண்ணீர்த் துளிகளோடு...
நானும்
கையசைத்து விடைபெறுகிறேன்.
1 comment:
தயவு செய்து என் கவிதைகளை சுட்டு உங்கள் கவிதையாக போடாதீர்கள்.
Post a Comment