
மழைபெய்ய வாய்ப்பிருப்பதை
சொல்லாமல் சொல்கிறது
மேகங்கள் சூழ்ந்திருக்கும் மெல்லிருட்டு
இணை தேட வைக்கிறது
நடுங்க வைக்கும்
குளிர்
எப்போதும் அருந்தும்
தேநீரை. . .
இன்னும் இதமாக்கிவிடுகிறது
நிலவும் சூழல்
ஒற்றையடிப் பாதையில்
தேர் வருவதைப் போல
ஆசிர்வதிக்கப்பட்ட நீர்நிலைகள்
நிரம்பி வழிகின்றன
திரும்பும் திசையெங்கும்
புன்னகைக்கும் பசுமை
வறண்டு கிடக்கும்
வாழ்வின் கரங்களில்
நம்பிக்கையைப் பரிசளிக்கிறது
குழந்தைகள் உலவும்
வீடுகளை ஞாபகப்படுத்துகிறது
வனங்களில் உலவும்
விதம்விதமான
பட்டாம்பூச்சிகளும்
ஒரேமாதிரியான
தட்டாம்பூச்சிகளும்
முகம் அறியாத பாடல்
பழக்கமாகிவிட்டது
கேட்டுவிட்டுப் போகிற நமக்கும். . .
பாடிவிட்டுப் போகிற பறவைகளுக்கும். . .
மழைக்காலத்தைப் போல
இத்தனை ரம்மியமானதில்லை
வேறெந்தக் காலமும்!
No comments:
Post a Comment