
அன்புள்ளக் கடவுளுக்கு,
இதுதான் இறுதி என்று
எழுதுகிறேன்..
எத்தனை முறை எழுதுவது
கடிதம் உனக்கு?
பிரிக்கப்படாமலும் படிக்கப்படாமலும்
கிடக்கின்றன அவை
முகவரியே நீ தான்
தர மறுக்கிறாய்
உள்ளே இருந்து கொண்டு
வர மறுக்கிறாய்
நீ யார் என்ற போருக்குள்
யார் நீ என்ற கேள்விகளுக்குள்
விரிந்துகொண்டே போகிறாய்
அழுகையை மட்டும்
உனக்கும் எழுதிவைக்கிறேன்
நீ தான் பொறுப்பென்று
சுகத்தை எனக்குள்
பதுக்கி வைக்கிறேன்
நிரந்தரமென்று
எதையும் பொருட்படுத்தாத
உன் மௌனத்தைக் கண்டு
என் பேனா முனைகள்
உடைகின்றன
தூர வீசுகின்றேன்
கோபம் களைந்து
மீண்டும் எழுதுகிறேன்
உன் மௌனத்தைக் கலைக்க
ஒரு கடிதம்
இதுதான் இறுதியென்று...
இப்படிக்கு,
என்றும் நான்
1 comment:
கடவுளின் மௌனம் ஒரு நாள் கவிதையாகும்...
அன்று புரியும் அவரின் மௌனம்...
உங்கள் புலம்பல் கடிதம் மாதிரி இன்னும் எத்தனை இருக்கின்றதோ கடவுளின் கையில்..
பொறுமையா இருந்து கவிதை ரசியுங்கள்..
கடவுளின் கடிதம் மிக அருமை...
Post a Comment